Monday, July 28, 2008

வாழ்வா சாவா

வாழ்வா சாவா 

‘‘விடம் கலந்த பாம்பின்மேல் 
நடம் பயின்ற நாத&ன’’ 
- திருச்சந்த விருத்தம் \\

 பள்ளி நாட்களில் நான் ‘வீரசிம்மன்’ என்கிற நாடகத்தில் பெண்வேஷம் போட்டதையும் அப்போது என் வயசுக்காரர்களுக்கு ஓர் அரிஸ்டாட்டில் போல இருந்த வரதனைப் பற்றியும் ஸ்ரீரங்கத்து தேவதைகள் முதல் பாகத்தில் சொல்லியிருக்கிறேன். படித்தவர் களுக்கு ஞாபகம் இருக்கலாம். இந்த வரதன் ஜி. வரதன். ‘ஜி.வி.’

என்ற பெயரில், அரு. ராமநாதனின் ‘காதல்’ பத்திரிகையில், ‘சலனம்’ என்ற ஒரு கதை எழுதியவன். இலக்கிய ஆர்வம் உள்ளவன். ‘வீரசிம்மன்’ உட்பட பல நாடகங் களை எழுதி நடித்தவன். இவன் வேறு, பகுத்தறிவுப் பாசறை வரதராஜன் (ஏ.வ. அரசு) வேறு. இரு வரையும் குழப்பிக்கொள்ளாதீர்கள்.

ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதன், ரங்கராஜன், வரதராஜன் போன்ற பெயர்கள் நிறைய வரும். தெருவில் நின்றுகொண்டு ‘வரதூ’ என்று கூப்பிட்டால், குறைந்தபட்சம் நாலு பேர் திரும்பிப் பார்ப்பார்கள்.

‘வீரசிம்மன்’ நாடகத்தின்போதே வரதனுக்கு முப்பத்தைந்து வயது. வேலை யேதும் அப்போதும் பார்த்ததில்லை. திண்ணையில் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்துகொண்டு, கீழச்சித்திரை வீதியில் போவோர், வருவோரை விசாரித்துக்கொண்டிருப்பான்.

சின்னப் பயல்களைப் பலவகை ‘எர்ரண்டு’களுக்கு அனுப்புவான். அவர்களுக்கு லெமன் ஸ்பூன் ரேஸ், காய்ந்த ரொட்டியை யார் சீக்கிரம் கடித்துச் சாப்பிடுகிறார்கள் போன்ற பந்தயங்கள் வைப்பான். ராமனுடன் இவனுக்குப் புகையிலை சிநேகிதம்.

நான் சிவில் ஏவியேஷனில் சேர்ந்து, சென்னை மீனம்பாக்கத்தில் பொறுப் பேற்றுக்கொண்டு, பரீட்சை பாஸ் பண்ணி டெல்லிக்கு மாறி, சப்தர்ஜங் விமானநிலையத்தில் டெக்னிக்கல் ஆபீஸ ராக வேலைபார்த்துக் கல்யாணமாகி, அப்பா ரிட்டயராகி, ஸ்ரீரங்கத்தில் செட்டில் ஆகி, ஒரு முறை ஸ்ரீரங்கம் வந்தேன்.

‘நான் ஒரு எழுத்தாளனாவேன்’ என்று தெரிவதற்குள், பாட்டி 1955-ல் பாபனாசத்தில் இறந்துபோனாள். பாட்டி, பரமபதத்தில் ‘இந்தப் பிள்ளை என்ன செய்கிறானோ, எப்படிப் பிழைக் கிறானோ?’ என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பாள். ‘பாட்டி ஐம் ஓகே’ என்று எஸ்.எம்.எஸ். அனுப்ப முடிய வில்லை.

இன்ஜினீயரான என் மாமனார், அப்போது திருச்சியில் போஸ்டிங் ஆகியிருந்தார். அதனால் என் இரு பிள்ளைகளும் ஸ்ரீரங்கத்தில்தான் பிறந்தார்கள். மனைவி பிரசவம் முடிந்து தாய்வீட்டில் இருந்தபோது ‘குழந்தையை யும் பார்த்துவிடலாம், அப்பாவுட னும் இருக்கலாம்’ என்று லீவு சேர்த்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வந்தேன். மறுபடி வரதனை ஏறத்தாழ பன்னிரண்டாண்டு இடைவெளிக்குப் பின் ரங்கு கடையில் சந்தித்தேன்.

‘‘என்னடா, டெல்லியெல்லாம் எப்படி இருக்கு? கல்யாணமாயி அதுக்குள்ள குட்டி போட்டுட்டியே… பேஷ், பேஷ்!’’

வரதன் மாறியிருந்தான். தலைமுடி நரைத்துப்போய், தொப்பை வந்து பொலிவிழந்திருந்தான். டயாபடிஸாக இருக்கலாம். ஸ்ரீரங்கத்தில் ஒவ்வொரு பண்டிகைக்கும் அக்காரவடிசிலும் அதிரசமும் குஞ்சாலாடும் சாப்பிட்டே பலருக்கு டயாபடிஸ்.

நீண்டநாள் புகையிலைப் பழக்கம்… பற்களில் வெளுப்பே தெரியவில்லை. இப்போதும் அரை மணிக்கொரு தடவை கொப்பளித்துக் கொண்டிருந்தான். முன்பெல்லாம் வெள்ளி தம்ளர், கூஜா. இப்போது வெண்கலம்.

கொஞ்சம் இளைத்திருந்தான். கண்களில் மட்டும் பழைய பிரகாசம். ‘‘எப்படி இருக்கே வரதன்? ‘வீரசிம்மன்’ டிராமாவெல்லாம் இன்னும் போட்டுண்டிருக்கியா?’’

‘‘ஓ! வருஷா வருஷம மார்கழித் திருநாள்ம்போது என் டிராமா இல்லாமயா? இருப்பியா… பாத்துட் டுப் போறியா… ஆக்ட் பண்றியா?’’

நான் அவசரமாக, ‘‘வேண்டாம்… வேண்டாம். நான் மெட்ராஸ் போயிண்டே இருக்கேன்…’’

நான் நடித்த முதல் நாடகம் ஒரு கெட்ட கனா போல் இப்பவும் நடு இரவில் திடீர் என்று உடலெங்கும் வியர்வையுடன் என்னை எழுப்பும்.

வீரசிம்மன் (வரதன்) சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்க, படுதா ஓரத்தில் நின்று கொண்டு தோழிப்பெண்ணாக நான் விசிற, என் மேலாடை விலகி பெரிய கலாட்டாவானதும் ஒரு குடிகாரன் என்னைத் துரத்தினதும் இப்போது நினைத்தாலும் வயிற்றில் ஐஸ்கத்தி பாய்ச்சுகிறது.

‘‘டிராமாவெல்லாம் சரி… ஜீவனத்துக்கு என்ன பண்ணிண்டிருக்கே?’’

‘‘நிலத்திலிருந்து வருமானம் போறாது. விளைச்சல் சரியில்லைன்னா, தாத்தாச்சாரியார் தோப்புக்குப் பக்கத்தில் பிளாட் போட்டு, ப்ராபர்ட்டி டெவலப் பண்றேன். கொள்ளிடம் பக்கத்தில நொச்சியம் இந்த மாதிரி எடத்திலயும் பேசிண் டிருக்கேன். அர்பன் லேண்ட் சீலிங் வந்தப்பறம் அக்ரிகல்ச்சர் லேண்டை மாத்தறதுக்கு லஞ்சம் கொடுக்கவேண்டியிருக்கு. ஃபிலிம் ஃபீல்டுலயும் வரப்போறேன். ஒரு படம் எடுக்கலாமானு யோசிச்சிண்டிருக்கேன். உங்கிட்ட நல்ல ஸ்டோரி இருக்கா, ஜெய்யை வெச்சு? விகடன்லல்லாம் எழுதறியாமே…’’

‘‘சும்மா போதுபோக்குக்கு!’’

‘‘இப்ப டிஸ்ட்ரிப்யூஷன் பண்ணிண் டிருக்கேன்…’’

‘‘அட!’’

‘‘புதுப் படத்தை எடுக்கமாட்டேன். ஒரு தடவை ஓடிக் களைச்சதை செகண்ட் ரன் எடுத்து, டூரிங் கொட்டாய்ல எல்லாம் பெட்டி மாத்தி ஓட்டறது. அங்கங்கே போய் கலெக்ஷன் பண்றதுக்கு காரியஸ்தன் இருக்கான். வண்டி ஓடணுமோல்லியோ?’’

‘‘பசங்கள்லாம்?’’

‘‘பையன் ஜமால்ல படிக்கிறான்… பொண்ணு எஸ்.எஸ்.எல்.சி.!’’

‘‘அப்பப்ப கலைச்சேவை…’’ என்றான் ரங்கு. ‘‘இந்த வருஷம் யார் வரா, கேளு…’’

‘‘இந்த வருஷம் வர மாசம் ‘வாழ்வா, சாவா’னு ஒரு சமூக நாடகம் போடறேன். அதுக்குத் தலைமைதாங்க சாவித்திரி வர்றாங்க…’’

‘‘சாவித்ரின்னா?’’

‘‘நடிகை சாவித்திரி… நீ ‘மிஸ்ஸியம்மா’ பார்த்ததில்லை?’’

‘‘பாத்திருக்கேன்… நிஜமாவா?’’

‘‘என்னடா இவன்! அம்பி, நீ ஆத்துக்குப் போய் மாமிகிட்ட ‘சாவித்திரி எழுதின கடுதாசியை மாமா கேக்கறார்’னு வாங்கிண்டு வா…’’

‘‘சாவித்திரியா…’’

‘‘என்னடா வாயைப் பொளக்கறே?’’

‘‘நிஜமாவே சாவித்திரியா?!’’

ரங்கு, ‘‘சாவித்திரி என் அபிமான நடிகை. அருமையா நடிப்பாங்க…’’

‘‘இந்தியாவிலயே பெஸ்ட் - ‘தேவதாஸ்’ல பார்வதியா வருவா பாரு… ‘ஓ ஓ ஓ தேவதாஸ்…’ பாத்தல்ல?’’ என்றான் வரதன்.

ரங்கு ‘‘ஏய், வரதா… என்னை ஒரு முறை இண்ட்ரோட்யூஸ் பண்ணிர்றா. ஒரு முறை கையைக் குலுக்கிடறேன். ரத்னா ஸ்டூடியோல சொல்லி, போட்டோ எடுத்துரலாம். மை காட்! அது என்ன ‘வாராயோ வெண்ணிலாவே…’னு பாடுவா பாரு… ஃபேஸ்ல ஒரு இன்னொசென்ஸ்!’’

‘‘இந்த வருஷம் டிராமாவுக்கு அத்தனை டிக்கெட்டும் புக் ஆயிடும் முதல் ரெண்டு வரிசையில சோபா போட்டு, ‘டோனர்’னு அம்பது ரூபா டிக்கெட். மற்றதெல்லாம் பாரபட்சம் இல்லாம பத்து, பத்து ரூபா. லாஸ்ட் ரோ நின்னுட்டுப் பாக்கணுமானா, அஞ்சு ரூபா…’’

‘‘எல்லாமே கொஞ்சம் வெலை ஜாஸ்தியா இருக்கே!’’

‘‘காத்துள்ளபோதே தூத்திக்க ணும்… என்ன ரங்கு?’’

‘‘ஆமாண்டா!’’

இதற்குள் அந்தக் குட்டிப்பையன் அந்தக் கடிதத்தைக் கொண்டுவந் தான்.

‘‘கொண்டா…’’ என்று ரங்கனுடைய கண்ணாடியை இரவல் வாங்கிப் போட்டுக்கொண்டு படித்துக் காட்டினான்.

அந்தக் கடிதம் இங்கிலீஷில் இருந் தது. லெட்டர்ஹெட்டில் சாவித்திரியின் சிரிக்கும் போட்டோ இருந்தது.

‘அன்புள்ள ஸ்ரீ ஜி. வரதராஜன்.

தங்கள் கடிதம் பார்த்து மிஸ் சாவித்திரி மிகவும் மகிழ்ந்தார். இதனுடன் கையெழுத்திட்ட புகைப்படம் இணைத்திருக்கிறோம்.

இப்படிக்கு

(கையெழுத்துப் புரியவில்லை!)

மிஸ் சாவித்திரியின் செக்ரெட்டரி…’

‘‘ஸ்ரீரங்கத்துக்கு வர்றதா போடலையே…’’

‘‘இரு… இதுக்கப்புறம் போன்ல பேசி &னன். ரமேஷ் ராகவ்னு அவருடைய செக்ரெட்டரியை அகஸ்மாத்தா சந்திச்சேன். பெருமாளைச் சேவிக்க வந்திருந்தார். சாவித்திரியும் வராங்களாம். அப்படியே நம்ம நாடகத்தையும் அட்டெண்ட் பண்ணிட்டு, ராத்திரியே கார்ல புறப்பட்டுர்றா மாதிரி ஏற்பாடு பண்ணிடலாம்னார். சாவித்திரிக்கு ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப் போறேன்…’’

‘‘நான் வரேன். எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. போஸ்டர் அடிக்கணும். நோட்டீஸ் அடிக்கணும். டிக்கெட் புக் நம்பர் போடணும். கேன் சேர், தகர சேருக்கு ஏற்பாடு பண்ணணும். இதுக்கு நடுவில் ரிகர்சல் பண்ண ணும். எனக்குன்னா பரவாயில்லை, சமாளிச்சுருவேன். கோட்டையில் இருந்து லேடி ஆர்ட்டிஸ்ட் வரா. சுட்டுப் போட்டாலும் தமிழ் வரலை. இப்பக்கூட லேட்டில்லை… நீ நடிக்க வரேன்னா, ஒரு பார்ட் பாக்கியிருக்கு…’’

‘‘அய்யோ… நான் வரலைப்பா…’’ என்று பதறி&னன்.

‘‘ ‘வீரசிம்மன்’ல நீ லேடி காரெக்டர் பண்ணதை, இத்தனை வருஷம் கழிச்சும் ஜனங்கள் ஞாபகம் வெச்சிண்டிருக்கு!’’

மறுபடி ஐஸ்கத்தி. ‘‘அதான் பிரச்னை…’’ என்றேன்.

அவன் போனபின் ரங்குவிடம், ‘‘இவன் சம்பாத்தியம் எப்படி ரங்கு? அரிசி, பருப்புக்கெல்லாம் என்ன பண்றான்?’’

‘‘ஏன் கேக்கறே… சம்பாத்தியமே கிடையாது. பெருங்காய சொப்பு. வீட்ல நெலமெல்லாம் வித்தாச்சு. பெஞ்சு, நாற்காலியெல்லாம் வித்துண்டிருக்கான். இவாத்துல பழைய காலத்து சோபா, கட்டில், இவன் தாத்தா பெரிய ஸ்காலர்… அவர்ட்ட ஏகப்பட்ட அரிதான புஸ்தகங்கள்லாம் இருக்கு… எல்லாத்தையும் கோட்டைக்குக் கொண்டுபோய் எடைக் குப் போட்டுருவான். பழைய கிராமபோன், நல்ல நல்ல பிளேட்டு… அரியக்குடி, எம்.எஸ்.!’’

‘‘அடப்பாவமே… நீ உதவி பண்ணக் கூடாதோ?’’

‘‘கேக்கமாட்டா&ன… ரொம்ப வெத்து ஜம்பம். கார்வார்… இப்படித்தான் ஐயங்கார் ஜாதியே சீரழிஞ்சிண்டிருக்கு. படிப்பு இருக்கறவன் பொழைச்சுக்கறான். எல்லாரும் ஊரைவிட்டுப் போயிட்டாங்க. சித்திரை வீதில பாதிக்குமேல வீட்டை வித்தாச்சு. முன்பக்கம் லாந்திட்டு வாசல்ல, சிமெண்ட் பூசின வீடெல்லாம் புதுசா வந்தவா வீடு. நம்முது எல்லாம் கூரை…’’

‘‘கொஞ்ச நாள்ல வாசல்ல ஆடு கட்டினாலும் ஆச்சரியப்படமாட்டேன்…’’

‘‘இதெல்லாம் தவிர்க்கமுடியாத சமூக மாறுதல்கள் ரங்கு…’’

‘‘என்னவோ போறது… டிராமாவில் நிகரமா பத்தாயிரம் ரூபா பண்ணா, ஒரு வருஷம் ஓட்டிடுவான். அதில்தான் ஹோப் வெச்சுண்டு, சப்புகொட்டிண்டு இருக்கான். சாவித்திரி, சரஸ்வதினு ஊருரா அலையறான் கிடந்து…’’

‘‘சாவித்திரி வருவாங்களா?’’

‘‘வரணும்… யாருக்கோ அட்வான்ஸ் கொடுத்திருக்கான். சாவித்திரி வரலைன்னா, கொட்டாயை எரிச்சுருவாங்க… ரிஸ்க்கு. அந்தப் பேரைச் சொல்லித்தான் டிக்கெட் அடிச்சு விக்கப்போறான்…’’

அடுத்த வாரம் ஸ்ரீரங்கம் எங்கும் நடிகை சாவித்திரியின் போட்டோ போட்டு சுவரொட்டிகள் இருந்தன.

மிஸ்ஸியம்மா ஸ்ரீரங்கம் வரு கிறார். ‘வாழ்வா, சாவா’ நாடகத்துக் குத் தலைமைதாங்கவும் ஸ்ரீரங்கம் சாவித்திரி ரசிகர் மன்றத்தைத் துவக்கி வைப்பதற்கும்… டிக்கெட்டுக்கு முந்துங்கள். இவண் ஜி. வரதராஜன், செயலர், ஸ்ரீரங்கம் சாவித்திரி ரசிகர் மன்றம் (ரி)… மொட்டைமாடியில் ‘வாழ்வா, சாவா’ ஒத்திகை நடந்துகொண்டு இருந்தது.

- சேகர் இதுதான் உன் கடைசி முடிவென்றால், நான் கிணற்றில் விழுந்து உயிரிழப்பேன்.

- கலங்காதே கண்மணி.

- என் வயிற்றில் வளரும் சிசுவினை மனதில்கொண்டு என்று கக்குண்டு பேசிக்கொண்டிருந்தான். வரதன் டைரக்ட் பண்ணிக்கொண்டிருந்தான். இதில் நடிக்கும் பெரிய ஆபத்திலிருந்து தப்பித்தேன் என்று மனசுக்கள் மகிழ்ந்தேன்.

‘‘வாடா… எல்லா டிக்கெட்டும் வித்துப்போச்சு. எக்ஸ்ட்ரா டிக்கெட்டுக்கு ஏகப்பட்ட டிமாண்டு. இன்னும் ரெண்டு ரோ சேர் போடலாம்னா, கந்தசாமி கடையில மேற்கொண்டு சேர் இல்லை… கரூர், குளித்தலை போனா கிடைக்கும்ங்கறான். ரொம்ப செலவு…’’

‘‘சாவித்திரி கன்ஃபர்ம் பண்ணிட்டாங் களா?’’

‘‘அதுதான், இப்ப பெரிய ப்ராப்ளம். கிணத்துல கல் போட்டாப்பல இருக்கு. சாவித்திரி வந்துருவாங்க. அவங்களுக்குத் தந்தி அடிச்சுட்டு, லெட்டரும் போட்டுட்டேன். மார்கழி மாச உச்சவத்துக்கு எப்படியும் வந்தே தீரணும். கல்லணையில ஷ¨ட்டிங் வேற இருக்காம்…’’

‘‘அதாவது, நீ எங்கிட்ட காட்டின ஃபேன் லெட்டரைத் தவிர, சாவித்திரிகிட்டருந்து வேற எதும் வரலை?’’

‘‘அப்படி இல்லைடா… அதுக்கப் புறம் நாலு லெட்டர் போட, ரமேஷ் ராகவுக்கு ஸ்ரீரங்கம் புரோகிராம் விவரத்தையும் சேர்த்து அனுப்பிருக்கேன்…’’

‘‘பதில் வந்ததோ?’’

‘‘வரலை… அப்படின்னா என்ன அர்த்தம்… சம்மதம்னுட்டுதா&ன?’’

‘‘அது எப்படி வரதன்?’’

‘‘சம்மதம் இல்லைன்னு இத்தனை நாழி அடிச்சுப் புடைச்சுண்டு லெட்டர் வந்திருக்கணுமில்லையா?’’

‘‘வந்திருக்கணும்…’’

‘‘வரலையே இதுவரைக்கும்…’’ - எனக்கு இந்த விநோதமான லாஜிக் புரியவில்லை.

‘‘போன் போட்டுப் பேசினியா?’’

‘‘ ‘குண்டூசி’யில ஒரு நம்பர் கொடுத் திருந்தா. யாரோ தெலுங்கில பேசினா. நான் விவரத்தைச் சொல்லிட்டு அட்ரஸையும் கொடுத்திருக்கேன்…’’

‘‘ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம் வரதன்… எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாம டிக்கெட் அடிச்சு வித்துட்டு…’’

‘‘என்ன சொல்றே நீ?’’

‘‘எதுக்கும் நீ ஒரு தடவை மெட்ராஸ் போய்ப் பார்த்துப் பேசிட்டு வர்றது நல்லது வரதன்…’’

‘‘எங்கடா டயம்… நான் ஒருத்த&ன எல்லாத்தையும் பாத்துக்கணும்னா?’’

நான் டெல்லிக்குத் திரும்பும்போது, ஒரு நாள் சென்னையில் இருப்பதால் விசாரிப்பதாகச் சொன்&னன்.

அவன் உட&ன எட்டு இடமும் குளிர்ந்து, ‘‘உண்மையான ஃப்ரெண்ட் நீதாண்டா எனக்கு வேணும்… இந்த டிராமா பண்ணிட்டேன்னா, எங்கயோ போகப்போறேன் பாரேன்…’’

‘‘யார் இந்த ரமேஷ் ராகவ்? யாருக்கு போன் பண்ணே? எல்லா விவரமும் சொல்லு…’’

அழுக்கான ஒரு விசிட்டிங்கார்டைக் கொடுத்தான். அதில் ‘ரமேஷ் ராகவ்’ என்ற பேர் போட்டு, ஒரு பிபி நம்பர் டெலிபோன் எண் போட்டிருந்தது.

சென்னைக்குக் காலை வந்து சேர்ந்து, க்ளாக் ரூமில் பெட்டி படுக்கையைப் போட்டுவிட்டு, மாலைதான் ஜி.டி. பிடிக்கவேண்டும் என்பதால், நேரமிருந்தபோது சித்தப்பா வீட்டிலிருந்து டெலிபோன் செய்தேன்.

‘‘அப்படி யாரும் இல்லையே இங்க…’’ என்றார்கள்.

‘‘இந்த நம்பர் என்ன?’’

‘‘இது தையக் கடைன்னா…’’

என்னிடம் ‘குண்டூசி’ கொடுத்த சாவித்திரியின் எண்ணும் இருந்த தால், அங்கே போன் பண்ணபோது ஒரு இளம் குரல் ‘‘ஷ¨ட்டிங்லோ… ஷ¨ட்டிங்லோ…’’ என்றது. எனக்குத் தெரிந்த ஒரே தெலுங்கு வார்த்தை யைப் பிரயோகித்து, ‘‘எக்கட?’’ என்றேன். ‘‘வாஹினிலோ, ப்ரசாத்லோ, ஏவிஎம்லோ தெலியலேது…’’

நான் டிரங்கால் புக் பண்ணி, ரங்கநாதா மெடிக்கல்ஸ் மூலம் வரதனைக் கூப்பிட்டுப் பேசி&னன்.

‘‘வரதன், நீ கொடுத்த அந்த நம்பர் தப்பு. அவனுக்கு ஏதாவது பணம் கொடுத்தயா?’’

‘‘அதை ஏன் கேக்கறே? பணத்தை வாங்கிண்டு கம்பி நீட்டிட்டான்… ஆள் அட்ரஸே இல்லை. அட்வான்ஸ் கேட்டான். ஆயிரம் ரூபா வாங்கிண் டான்…’’

‘‘என்ன வரதா… நீ இப்படிப் போய் ஏமாந்திருக்கியே! நாடகம் எப்ப?’’

‘‘நாளைக்குடா… டேய், நீ எனக்கு ஒரு உபகாரம் பண்ணணும். நான் வரமுடி யாது. நீ ஏவிஎம்மோ, வாஹினியோ போய், சாவித்திரி… அவங்களை எப்படியாவது சந்திச்சு, நான் எழுதின நாலு கடுதாசியைப் பத்திச் சொல்லி…’’

ஏவிஎம்மில் ஒரு பாடல் காட்சியில் நாகரா ஒலிக்க, ஒரே வரியை எட்டு தடவை எடுத்துக்கொண்டிருந்தார்கள். என்னால் அந்தச் சந்தடியில் மிஸ் சாவித்திரியை கிட்டே போய்ச் சந்திக்க முடியவில்லை. சட்டென்று கார் ஏறிப் போய்விட்டார். அவரது செக்ரெட்டரி யைக் காட்டினார்கள். சந்தித்து என்னை அறிமுகம் செய்து கொண்டு விவரம் சொன்&னன்.

‘‘ரமேஷ் ராகவ்… அப்படி யாரையும் தெரியாதே! ஓயெஸ்… யாரோ ஒரு ஆள் வந்து ராகவனோ, யாரோ… டேட்ஸ் கேட்டார்… இல்லை. அப்ப ஊட்டி ஷ¨ட்டிங் போறம், வருஷம் பூரா டேட்ஸ் இல்லைனு சொல்லிட்டே&ன…’’

‘‘சார்… உங்களுக்கு ஒரு அட்வைஸ். அந்தாளை நம்பாதீங்க. எல்லார்கிட்டயும் ‘சாவித்திரி டேட்ஸ் வாங்கித் தரேன்’னு பொய் சொல்லிக்கிட்டுத் திரியறார். பணம் கேட்டாரா?’’

வரதனை போனில் பிடிக்க முடிய வில்லை. தந்தி கொடுத்தேன் - நைபீச்சி ஹநூநூ ஹசுசுஹபிகீக்ப்க்பிபீசூ. நஹஹ்கூபீகுசுகூ பிச்பீ ஷச்ப்கூபிகீ’ என்று. எனக்கு வரதன் அதை எப்படிச் சமாளிக்கப் போகிறான் என்று கவலையாக இருந்தது.

டெல்லி திரும்பினவுடன் ஆபீஸில் காலிப்ரேஷனுக்காக அகர்தாலா போகச் சொன்னார்கள். போய்வந்து ஒன்றரை மாதம் கழித்து திருச்சி விஓரை காலிப்ரேட் பண்ண சந்தர்ப்பம் வந்தபோது கிடைத்த அவகாசத்தில் ஸ்ரீரங்கம் சென்றிருந்தேன்.

‘‘ரங்கு, வரதனுடைய ‘வாழ்வா சாவா’ என்ன ஆச்சு?’’

‘‘ஏன் கேக்கறே… அமோகமா நடந்தது!’’

‘‘சாவித்திரி வந்தாங்களா?’’

‘‘வந்தாங்களே!’’

‘‘வந்தாங்களா… எப்படி?’’

‘‘திருச்சியிலிருந்து சாவித்திரி மாதிரி இருக்கிற ஒரு நடிகையை அழைச்சுண்டு வந்துட்டான். கடைசி நிமிஷத்துக்கு அது பொளந்து கட்டிடுத்து. மிமிக்ரி மாதிரி, சாவித்திரி மாதிரியே பேசிக் காட்டினா. முன்வரிசையில இருந்தவாகிட்ட ‘சினிமா நட்சத்திரமெல்லாம் நேர்ல பாக்கறதுக்கும் மேக்கப்போட சினிமால பாக்கறதுக்கும் வேற மாதிரி இருப்பா’னு சமாதானம் சொல்லிட்டு, லைட்டை அடிச்சே சமாளிச்சுட்டான். இன்னும் முக்காவாசி பேருக்கு, வந்தது நிஜ சாவித்திரி இல்லைன்&ன தெரியாது…’’

அப்போது வரதன் வந்து உட்கார்ந்தான். ‘‘என்னப்பா… எப்படிருக்கே? டெல்லியெல் லாம் எப்படி இருக்கு?’’

‘‘ ‘வாழ்வா சாவா’ நன்னா போச்சாமே!’’

‘‘அமோகம் போ… அடுத்தது சிவாஜி சாரைக் கூப்பிடலாம்னு இருக்கேன்!’’ என்றான் வரதன்.

No comments: