Monday, October 6, 2008

சேவியர் கவிதை

நான்
உன்னைச் சுற்றுகிறேன்
நீ
ஆண்டவனைச்
சுற்றுகிறாய்.

உன் தரிசனத்துக்காய்
நான்
ஆலய வாசலிலும்
ஆண்டவன்
உள்ளேயும் காத்திருக்கிறோம்.

இருக்குமிடத்திலிருந்தே
உனைத் தரிசிக்கும்
வரம்
ஆண்டவனுக்கு மட்டுமே
வாய்த்திருக்கிறது.



____________________________




நீ
பேசுவதெல்லாம்
இசையென்று
எல்லோரையும் போல
நானும் சொல்லியிருக்கிறேன்.
இப்போது
நல்ல
இசை கேட்கும் போதெல்லாம்
நீ
பேசுவது போலிருக்கிறது
எனக்கு


__________________________




உனக்காய்
பூ பறிக்கையில்
விரலில் தைத்த முள்ளை
விலக்க மனமின்றி வைத்திருக்கிறேன்.
தீயை முத்தமிட்டு
சிதறிச் சிரிக்கும்
மத்தாப்பு போல
முள்ளின் முனையில்
முளைக்கும் வலியில்
உன்னைப்பற்றிய
நினைவுகள் பூச்சொரிகின்றன



__________________________





காதலையும் நேரத்தையும்
வைத்து
நிறையக் கவிதைகள்.
எனக்கு
அதற்குக் கூட நேரமில்லை
உன்னைச் சந்தித்தபின்



_____________________________




எத்தனை
விலையுயர்ந்த
வாழ்த்து அட்டை அனுப்பினாலும்
உன்
விரலெழுதிய வரிகளைத் தான்
திரும்பத் திரும்ம
வாசித்துச் சிலிர்க்கும்
மனம்.
ஏதும் எழுதாமல்
நீ அனுப்பும்
பகட்டு அட்டையை விட
நீ
ஏதேனும் கிறுக்கி அனுப்பும்
தபால் அட்டை
மிக அழகு.
அழகழகாய்
அடுக்கி வைத்து
நீ
அனுப்பும் பூங்கொத்தை விட
உன்
சீண்டல் பூக்கவைக்கும்
பூக்கள் கொள்ளை அழகு.
தொலைபேசியில்
ஒலிக்கும்
உன் குரலை விட
உன்னோடு அமர்ந்திருக்கும்
மெளனம் தான்
அழகெனக்கு.
சீக்கிரம் வந்து விடு
தூர தேசத்தில்
கரன்சி சேமித்தது போதும்.
வந்தென் கரம் உரசி
சேமித்த காதலைச் செலவிடு.



___________________________






விஷயம் தெரியுமா உனக்கு ?
நீ
என் தோட்டப் பூவைத்தான்
தினசரி சூடுகிறாய்,
உன்
பூக்காரிக்கும் எனக்குமான நட்புக்கு
என்
காதலின் வயது.



______________________________






ஓரமாய் அமர்ந்து
நகம் வெட்டுகிறாய்.
விலகிக் கொஞ்சம்
விரல் வெட்டுவாயோ,
எனும்
என் பதட்டத்தின்
பல்லிடுக்கில்
உதட்டு இரத்தம் ஒட்டுகிறது.




__________________________




சிவந்த
உன் சிறிய உதடுகளில்
நீ
சாயம் பூசும் போது
உதட்டுச் சாயம் கொஞ்சம்
நிறம் திருடிக் கொள்கிறதே
கவனித்தாயா கண்மணி ?


_________________________





மெதுவாய்
சிவந்த இதழ்களை வருடி
உன் தோட்டத்து
ரோஜாவுக்கு
நீ
முத்தம் தரும் போதெல்லாம்
எது ரோஜா
என்று தெரியாமல்
தடுமாறி நிற்கிறது என் மனசு…




____________________________

No comments: