Friday, October 3, 2008

சுஜாதாவின் வெண்பாவும் யூரின் தெரபியும்

அதிகாலையில் என்னைப் பார்க்க வந்திருந்தவர் கையில், கணையாழியின் கடைசிப் பக்கங்கள் நூல் இருந்தது. அதில், காது மடக்கின இடத்தைப் பிரித்து, ‘இது நீர் எழுதினதுதானா? என்றார். சற்று அதட்டலான குரல்.

அது ஒரு வெண்பா. எமெர்ஜென்சி யைத் தளர்த்தி, பொதுத் தேர்தல் நடத்தி, இந்திரா காந்தி தோற்று, மொரார்ஜி தேசாய் பிரதமராக வந்த காலத்தில், நான் எழுதிய வெண்பா.

யூரின் தெரப்பி… சிறுநீர் சிகிச்சை பற்றிப் பல செய்திகள் அப்போது வந்தன. தேசாயின் தேக ஆரோக் கியத்துக்கு முக்கியக் காரணம், அவர் தினம் காலையில் பருகும் இளமை ஊற்று என்று வேதங்கள் சொல்கிற வைக்கோல் நிற சொந்த திரவம்தான் என்று செய்திகள் வந்தன. இதைப் பல பேர் கேலி செய்தார்கள். எனக்கு இன்னும் சுதீர்தாரின் கார்ட்டூன் ஞாபகம் இருக்கிறது (பாத்ரூம் கதவு மூடியிருக்க, உள்ளேயிருந்து ‘சியர்ஸ்! பாட்டம்ஸ் அப்!!’ சப்தம்.). நான் அந்த தேசாய் தெரப்பி பற்றித்தான் ஒரு மெலிதான வெண்பா எழுதியிருந்தேன். அதைத்தான் அந்தப் பெரியவர் எனக்குச் சுட்டிக்காட்டினார். அவ் வெண்பா இஃது,

மிசா மறைந்து எமெர்ஜென்சி விட்டுப்போய்
தேசாயின் ஆட்சியில் சந்தோஷம் - பேசாமல்
பாத்திரம் ஒன்று எடுத்துக்கொண் டெல்லோரும்
_த்திரம் குடிக்கவா ரும்.

“நல்ல வெண்பாதானே? கொஞ்சம் அங்கங்க அட்ஜஸ்ட் பண்ணா, தளை தட்டாது!” என்றேன்.

“மண்ணாங்கட்டி! உமக்கு என்ன தெரியும், யூரின் தெரப்பி பற்றி?”

“அதிகம் தெரியாது சார்.”

“சொல்றேன், கேள்!” - ஆள்காட்டி விரலைக் காட்டி, “இதை நீ எளிதாக எண்ணக் கூடாது’’ என்று சரமாரியாக சரித்திரத்தை எடுத்துவிட்டார். ‘‘ரோமாபுரி சாம்ராஜ்யத்தில், மாமன்னர் கள் காலத்தில் இதன் விற்பனைக்கு வரி இருந்ததாம். வயிற்றில் அல்சர் போன்ற வியாதிகளுக்குச் சஞ்சீவியாகக் கருதப் பட்டது. குளிக்கும்போது ஒரு சொம்பு இதையும் மொண்டுகொள்வது உத்தமம் என்று ரோமர்கள் நம்பினார்களாம். சைனாவில் மூலிகை மருந்துகளை சிறுநீருடன் கலந்து கொடுப்பது தொன்றுதொட்ட வழக்கம். திறந்த புண்களுக்கும் அது தடவப்பட்டதாம். எகிப்திலும் குடித்தார்கள், தடவினார் கள், குளித்தார்கள். ஒரு பெண் கர்ப்ப மாக இருக்கிறாளா என்று கண்டுபிடிக்க பார்லி விதைகள் மேல் அவள் பெய்ய, அது முளைத்தால் கர்ப்பமாம்.ஜெர்மனி யில், பழங்காலத்தில் இளைஞனின் சிறுநீரை தேனில் கலந்து கொதிக்க வைத்து, கண்ணுக்கும் புண்ணுக்கும் தடவினார்களாம். இங்கிலாந்தில் ராத்திரி அதிகம் குடித்தால் (மூச்சா இல்லை, மது) அதிகாலை சிறுநீரை கையிலும் காலிலும் சூடாகத் தேய்த்துக் கொண்டால், ஸ்டெடியாகிவிடுவார் களாம். குங்குமப்பூ சேர்த்துக் கொப்பளிப்பது, தொண்டை கட்டிக் கொள்வதைத் தவிர்க்கும். பிரான்ஸில், அதிகாலையில் சிறுநீரைக் குடிப்பதால் கால் வீக்கம் குறையும் எனக் கண்டறிந்தனர். மஞ்சள்காமாலைக்கும் ‘அது’ நல்ல மருந்தாம்! இன்றும் பலர் ரகசியமாக தினம் அரை டம்ளர் குடிக்கிறோம்.” - இவ்வாறு அடுக்கிக் கொண்டே போனார் பெரியவர்.

‘‘இப்படிப்பட்ட முக்கியமான சிகிச்சையை, 19&ம் நூற்றாண்டின் மருத்துவம் நான்சென்ஸ் என்று சொல்லிவிட, சிறுநீர் வைத்தியம் சிறுமைப்பட்டுப் பதவி இழந்தது. அண்மைக் காலத்தில் மாற்று சிகிச்சை முறைகளில் இதற்கு புத்துயிர் வந்திருக்கிறது” என்றார். தொடர்ந்து, “சிறுநீர் உண்மையில் கழிவுப் பொருளல்ல. அதில் விஷம் எதுவும் கிடையாது. 95 சதவிகிதம் தண்ணீர்தான். மற்றதில், இரண்டரை விழுக்காடு யூரியா. மிச்சம் என்ஸைம்கள், தாதுப் பொருள்கள், ஹார்மோன்கள் எனப் பலதும் உள்ளது, இதற்கு ஆன்ட்டிசெப்டிக் குணங்களும் உண்டு” என்று சொல்லிவிட்டு, “எனக்கு என்ன வயசிருக்கும், சொல்?” என்றார்.

“அறுபத்தைந்து?”

“எண்பத்தைந்து! எல்லாம் காபிக்கு முன் கால் தம்ளர் குடிப்பதால்தான்!”

“என்ன டேஸ்ட் இருக்கும்?”

“அது அவரவரைப் பொறுத்தது. பரிசோதித்துப் பாரேன். இதன் மகிமை புரிந்தால் சரி!” என்று சொல்லி விடைபெற்றார்.

நான் டாய்லெட்டுக்குச் சென்றேன். “தீர்மானித்துவிட்டேன். இனிமேல் இதைப் பற்றி வெண்பா எழுத மாட்டேன்” என்று உரக்கச் சொல்லிவிட்டு, டாய்லெட்டின் சங்கிலியை இழுத்தேன்.

யூரின் தெரப்பியையும் ‘மங்கள் பாண்டே’யையும் துறந்துவிட்டு, கொஞ்சம் பிரபஞ்சத்தை வியக்கலாம். நாம் இருப்பது சூரியக் குடும்பம். “மில்க்கி வே” என்னும் பால்வீதி காலக்ஸியில், ஒரு ஓரத்தில் உள்ள நடுவாந்திர சைஸ் நட்சத்திரம் சூரியன்! சூரியனைச் சுற்றி பூமி, மணிக்கு 66,000 மைல் வேகத்தில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. சூரியன், பால்வீதியின் மையத்தை வைத்துச் சுற்றிக்கொண்டு இருக்கிறது. பூமி சூரியனைச் சுற்றி வர, ஒரு வருஷம் ஆகிறது. சூரியன் பால்வீதியில் ஒரு ரவுண்டு வர, இருபத்திரண் டரைக் கோடி ஆண்டுகள் ஆகின்றன. இத்தனைக் காலமாவதால், “மெல்லத்தானே சுற்றும்” என்று எண்ணாதீர்கள். ஆகாச கங்கை என்னும் பால்வீதியை ஒரு சுற்று முடிக்க எத்தனை மைல் போக வேண்டும், தெரியுமா? நூறாயிரம் ஒளி வருஷங்கள்! அதாவது 5865696 - க்கு அப்புறம் பன்னிரண்டு சைபர். அத்தனை மைல். எனவே, சூரியன் ஒரு செகண்டுக்கு135 மைல் வேகத்தில் பயணம் செய்கிறது. இது ஒரு காலக்ஸியின், ஒரு நட்சத்திரத்தின் சரித்திரம் மட்டுமே! இப்படிப் பல கோடிக்கணக்கான காலக்ஸிகள், பல கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்… இதெல்லாம் வேஸ்ட்டா? நாம் ஒருவர்தான் இந்த அண்ட பேரண்டத்தில் உயிருள்ளவர்களா? இதையெல்லாம் யோசித்தால், ராத்திரி தூக்கம் வராது!

வாழ்க வெண்பா வளர்க வெண்பாவின் புகழ்.


நன்றி - ஆனந்தவிகடன், சுஜாதா

No comments: