Friday, November 14, 2008

திரை விமர்சனம்

ஆசிப் மீரான் திரை விமர்சனம்




வாரணம் ஆயிரம் - நன்றி ஆயிரம்
சில ப்டங்களைப் பார்க்கும்போது சமயங்களில் ‘சே! போயும் போயும் இந்த நாவலை இப்படி படமா எடுத்து நாசம் பண்ணியிருக்காங்களே?!'ன்னு வருத்தம் வந்திருக்கும்.சில ப்டங்கள் நாவல் வாசிப்பது போன்ற இதத்ததைத் தருவதும் உண்டு. வாரணம் ஆயிரம் எந்த வகை?

படம் வெகு நீளம். சந்தேகமேயில்லை. அஞ்சலை பாடலுக்கு அவசியமேயில்லை. அதைப் போலவே சிகரெட் குடிக்காத இளைஞன் காதலியின் பிரிவால் வருத்தமிகுந்து போதைக்கு அடிமையாவதைக் காட்ட முயற்சிக்கும் நீண்ட காட்சிகள், காஷ்மீரில் தன்னிச்ச்சையாக சுற்றித் திரியும் காட்சிகள் என்று சில விசய்ங்களை வெட்டியிருந்தால்... படம் நீளம் குறைந்து இன்னமும் கச்சிதம் பெற்றிருக்கும். ஆனாலும்....

தகப்பனை தனது நாயகனாகக் கொள்ளும் மகனின் வர்ணனையாகக் காட்சிகளை விவரித்து கௌதம் சொல்லியிருக்கும் பட்ம வெகு அழகு. காதல் காட்சிகள் மிகைப்பட்டதாகத் தோன்றினாலும் சுவை குறைந்ததாக இல்லவே இல்லை - அதிலும் சமீரா ரெட்டியையும் வைத்துக் கொண்டு.

படத்தில் வாரணம் ஆயிரம் சூழ எழுந்து நிற்பவர் சூர்யா.
படம் முழுக்க ஆயிரம் அவதாரங்கள்.(எந்த அவதாரத்திற்காகவும் ஒப்பனை செலவு ஏதுமில்லை என்பது மிக முக்கியம்) ஒவ்வொரு சட்டத்திலும் ஒவ்வொரு தோற்றம். உடல் மொழியாலும், முக பாவனைகளாலும், மிகைய்ற்ற குரல் மொழியாலும் மிரட்டுகிறார்.
தமிழில் கமலைப் போல இன்னுமொரு அற்புதமான நடிகன் இருப்பதே பேருவகையாக இருக்கிறது. வாழ்த்துகள் சூர்யா!


(இந்த இடத்தில் வழக்கம்போல இளைய தளபதிகள், புரட்சி தளப்திகள், புண்ணாக்கு தளபதிகளையெல்லாம் உங்கள் இஷ்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்)

ஒரு நீண்ட நாவலைப் படிப்பது போல சில சமயங்களில் சுவாரஸ்யமகாவும் சில சமயங்களில் அயர்ச்சியூட்டுவதாகவும் சில சமயங்களில் போதை தருவதாகவும் சில சமயங்களில் வடுவேற்படுத்துவதாகவும், சில சமயங்களில் மென்முறுவல் பூக்க வைப்பதாகவும் இருந்த போதிலும் படிக்காமல் கீழே வைக்க முடியாத அளவுக்கு ஒன்றிப்போக முடிவதாக இருப்பது படத்தின் சிறப்பென்று கருதுகிறேன்.

தந்தையிடம் காதலி பற்றி பேசுகிறான் மகன். தந்தை புன்முறுவலுடன் கேட்கிறார். ‘We made love daddy' என்று கதறும் மகன் தமிழ்ச் சூழலுக்கும் தமிழ் சினிமாவுக்கும் ரொம்பவே புதுசு. பழையவைகளை மறந்து மீண்டும் காதல்வயப்படும்போது ‘சீக்கிரமே அவளிடம் காதலைச் சொல்லிடுடா! காக்க வைக்காதே!” என்கிறார் தந்தை. “டேய் நீ அப்பாவா? மாமாவா?” என்று அரங்கில் ஒரு குரல். சத்தியமாக இது அவர்களுக்கான படம் அல்ல.

தகப்பனை தியாகத்தின் உருவமாகவோ அல்லது புனிதப் பிம்பமாகவோ படைக்காமல் தனது நாயகனாகக் கருதும் மகனின் பார்வையில் விரிகிறது படம். தமிழ் சினிமாவில் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய முயற்சி.

அப்படிப்பட்ட மகனாக இருப்பவர்களுக்கு இந்தப் படத்தோடு வெகுவாக ஒன்ற முடியும். என்னால் முடிந்தது படத்தின் பல்வேறு நிறை குறைகளுக்குமிடையில்..

கௌதம் மேனனைப் போல படமெடுத்துச் சொல்ல முடியாவிட்டாலும்...இந்த வாய்ப்பில் இதனைச் சொல்லிவிடலாம்.

நன்றி வாப்பா!!
இதற்கு மேல் நானென்ன சொல்வது?

No comments: