Wednesday, January 28, 2009

செல்லெனப்படுவது......செல்வேந்திரன்

தினசரி டார்கெட்டினை முடித்துவிட்ட மகிழ்ச்சியில் கைலிக்கு மாறி டீ
குடிக்க கிளம்பிய போது நண்பர் கிருஷ்ணாவிடமிருந்து போன் வந்தது. எங்கே
இருக்கீங்கன்னு பதட்டமா விசாரிச்சவர் கொஞ்சம் கிளம்பி போத்தனூர் போலீஸ் ஸ்டேசன்
வரமுடியுமான்னு கேட்டதில் ஏதோ பெரிய பிரச்சனையென்று முடிவுக்கு வந்தேன். சரி
நேரில் பேசிக்கொள்ளலாம் என அவசரமாய் பைக்கை எடுத்துக்கொண்டு உடனே போத்தனூர்
கிளம்பினேன்.
உள்நாட்டு குழப்பமும், வறுமையும் உந்தி தள்ள இரண்டு தலைமுறைகளுக்கு முன்
நேபாளத்தை விட்டு புலம் பெயர்ந்து கோவையில் குடியேறியவர் கிருஷ்ணாவின் தந்தை.
பிழைக்க வந்த ஊரில் இரண்டு ஆண், ஒரு பெண் என மூன்று பிள்ளைகளை பெற்ற சாதனையோடு
செத்து போய்விட்டார். என்றைக்காயினும் நாடு திரும்பி சொந்த ஊரில் வாழ்ந்தாக
வேண்டும் என்ற கனவில் மொத்தக் குடும்பத்தையும் இழுத்து சுமக்கிற கிருஷ்ணாவின்
அம்மா அரும்பாடு பட்டு பிள்ளைகளை படிக்க வைத்து ஆளுக்கொரு வேலையும் வாங்கி
கொடுத்திருக்கிறார். பிள்ளைகள் சம்பாதிக்க ஆரம்பித்த பின்னும் நேபாளில்
குடியேறும் கனவில் இன்னும் வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறார் அந்த வயோதிகப்
பெண்மணி. மொத்த குடும்பமுமே உழைப்பிற்கும், ஒழுக்கத்திற்கும் பெயர் போனது.
கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் எவரோடும் உரத்து பேசியறியாத பிரஜைகள். ஒருவரது
சம்பளம் வாடகைக்கு, ஒருவரது சம்பளம் சாப்பாட்டிற்கு, ஒருவரது சம்பளம் நேபாளில்
சொந்தக்காரர்கள் உதவியோடு கட்டி வரும் வீட்டிற்கு இன்னொருவர் சம்பளம் ஓரே
பெண்ணின் திருமண செலவிற்கு என்று திட்டமிட்டு வாழ்ந்து வந்தனர்.

எப்போதாவது அரிதாக வீட்டிற்கு அழைத்து செல்வார் கிருஷ்ணா. நான்கு பேரும்
உழைத்து விட்டு வீடு திரும்பும் நேரம் அவர்கள் வீடே அமர்க்களப்படும். வயது,
உறவு வித்தியாசமின்றி காலை அவமானங்களையும், அடுத்த நாள் கவலைகளையும் அடியோடு
மறந்து அவர்கள் உற்சாகமாய் ஒருவருக்கொருவர் ஏதேனும் சொல்லி சிரித்தபடி வட்டமாய்
உட்கார்ந்து சாப்பிடுவதை பார்க்கையில் ஊரின் நிணைவு வந்து உறுத்த ஆரம்பிக்கும்.
புலம் பெயர்ந்த தேசத்திலும் பிரமாதமாக வாழ முடியும் என்பதற்கு உதாரணம் இவர்களென
நிணைத்துக்கொண்டு விடைபெறுவேன்.
கிட்டத்தட்ட நேபாளத்தில் வீடு கட்டும் பணிகள் முடிவடைந்து கோயம்புத்தூரை விட்டு
கிளம்பி விட நாளும் குறித்திருந்தார்கள். நேபாளத்தில் அவர்களது சமூகத்தை
சேர்ந்த ஒரு விவசாய இளைஞனுக்கு பெண்ணைக் கொடுத்து, மணமகனின் தங்கையையே
கிருஷ்ணாவின் அண்ணாவிற்கு திருமணம் செய்து கொள்வது என முடிவாகி இருந்தது.
நாங்கள் இத்தனை வருடம் பட்ட கஷ்டத்திற்கு ஒரு முடிவு வந்துவிட்டது. சொந்த
நாட்டில், சொந்த கிராமத்தில் அப்பா ஆசைபட்ட படியே எங்கள் குல தெய்வத்திற்கு
பூஜை கைங்கர்யங்கள் செய்து ஒரு நேபாளியாய் வாழப் போகிறோம் என என்னிடம் அடிக்கடி
சொல்வார் கிருஷ்ணா.
போத்தனூர் ஸ்டேஷன் வாசலிலேயே கலங்கிய கண்களோடு நின்று கொண்டிருந்தார் கிருஷ்ணா.
அவரை நெருங்கி 'என்னாச்சு கிருஷ்ணா... எதுனா ஆக்ஸிடெண்டா?! என்றேன். ஓவென
அலறியபடி முகத்திலடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார் கிருஷ்ணா. அவரது அருமைத்
தங்கை அவர்களுக்குத் தெரியாமல் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துவிட்டு
காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்து விட்டார் என்பதை அறிந்த நான் அதிர்ச்சியில்
உறைந்தேன். இதற்கு முன் நண்பர்களுள் யாராவது ஒருவர் ஏதாவது ஒரு பெண்ணை
காதலித்து வீட்டிற்கு தெரியாமல் கல்யாணம் செய்து கொள்ளத்தான் என்னுடைய உதவியை
நாடி இருக்கிறார்கள். நண்பன் ஒரு பெண்ணை கூட்டி வரும்போது எடுக்கிற
நிலைப்பாடும், நண்பனின் தங்கை ஓடிப் போய் விட்ட பொழுதில் எடுக்கிற நிலைப்பாடும்
ஒன்றாக இருக்குமா என்ன?!
தமிழகத்தைவிட பல வருடம் பின் தங்கி இருக்கும் நேபாள கலாச்சரத்திலிருந்து
வந்தவர்களுக்கு இது நிச்சயம் ஜீரணிக்க முடியாத பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
எத்தனை இருந்தாலும் ஓர் நாள் இந்த ஊரை விட்டு போக போகிறவர்கள் நாம்.
எல்லாரிடமும் அளவாக வைத்துக்கொள்ளுங்கள் என சொல்லி சொல்லி வளர்த்த பிள்ளைகளுள்
ஒன்று கிடை திரும்பும் போது பிரிந்த அதிர்ச்சியில் அந்த எளிய பெண்மனிக்கு
மாரடைப்பு வந்து விட்டதாம். அவளை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு
அருகிலிருந்து பார்ப்பதற்கும் ஆளில்லாமல் தவித்துக்கொண்டிருந்தான் மூத்த மகன்
என்பதை கிருஷ்ணா மூலம் அறிந்து கொண்டேன். ச்சே... என்ன பெண் இவள்.... யார்
குறித்தும் கவலை இல்லாமல் இப்படியொரு கல்யாணம் செய்து கொண்டாளே.... என
மனதிற்குள் கருவிக்கொண்டு காவல் நிலையத்திற்குள் புகுந்தேன். உள்ளே
கிருஷ்ணாவின் வீட்டருகே குடியிருக்கும் பெரியவர்கள் அந்த பெண்ணிடம் தாயின்
நிலையை சொல்லி வீடு திரும்ப சொல்லிக் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். எனக்கு யார்
குறித்தும் அக்கறை இல்லை. வாழ்ந்தா இவரோடு இல்லைன்னா இங்கயே செத்துடுவேன் என
வாதாடிக்கொண்டிருந்தாள் அவள். இதுமாதிரியான தினசரிக் காட்சிகளைப் பார்த்து
பழுத்த அனுபவமுள்ள காவலர் ஒருவர் " என்ன சொன்னாலும் இப்ப மண்டையில ஏறாது? சனியன
தலை முழுகிட்டு கெளம்புங்கய்யா... சோத்துக்கு அலையும்போது தெரியும்" என
பெரியவர்களை விரட்டிக்கொண்டிருந்தார். அவரிடம் எனது அடையாள அட்டையை காண்பித்து
விட்டு அவளை நெருங்கினேன். என்னைக் கண்டதும் முதுகை காட்டி திரும்பிக்கொண்டாள்.
அப்போதுதான் அந்த இளைஞனைக் கவனித்தேன். இந்தக் கிளிக்கு கொஞ்சம் கூட
பொறுத்தமில்லாத பூனையாக அதுவும் கடுவன் பூனையாக காட்சியளித்தான் அவன் (ர்).
குறைந்தது 35 வயது இருக்கலாம். அவள் வேலை செய்யும் ஜவுளிக்கடையில் இவனும் வேலை
பார்க்கிறானாம். சேலை மடிப்பது தவிர வேறு சோலி பார்க்க தெரியாத பனாந்தரி என்பது
அவன் முகத்திலேயே தெரிந்தது.
அவளோடு பேசினால் அவமானத்தை தவிர வேறு எதுவும் மிஞ்சாது என்பது புரிந்தது.
இன்ஸ்பெக்டரிடம் பேசி அவனது முகவரியைப் பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன். அவன்
குடியிருக்கும் ஏரியாவில் இருக்கும் பத்திரிகை நண்பருக்கு போன் செய்து
விசாரித்தேன். 'அவனா... ஏற்கனவே ஒருத்தி கூட கல்யாணம் ஆகி, ஓரே வாரத்துல அந்த
பொண்ணு இவன்கூட இருக்க முடியாதுன்னு ஓடிப்போயிடுச்சே' என அடுத்த அதிர்ச்சியை
தந்தார். அடக்கடவுளே....!
நொந்து போயிருக்கும் கிருஷ்ணாவிற்கு இன்னுமொரு பேரதிர்ச்சியை கொடுக்க வேண்டாம்
என முடிவு செய்து அவருக்கு டீ வாங்கி கொடுத்து கொஞ்சம் தேறுதல் வார்த்தைகளை
சொல்லி அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன். வராந்தாவில் அவரது
அண்ணன் கதறியழுது கொண்டிருந்தான். நேபாளில் விடுவதற்காக உயிரைப் பிடித்து
வைத்திருந்த அந்த பெண் இறந்துவிட்டிருந்தாள். இரண்டு இளைஞர்களும் தங்கள்
நெஞ்சிலடித்துக்கொண்டு அழ ஆரம்பிக்க கடவுள் குறித்த எனது நம்பிக்கைகள் நொறுங்க
ஆரம்பித்தன.
கிருஷ்ணாவின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விபரம் சொல்லி, மருத்துவமனைக்கு
செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி அவளது உடலை வீட்டிற்கு எடுத்து வருவதற்குள்
இரண்டு இளைஞர்களும் நான்கைந்து முறை மயக்கமடைந்தனர். அவளது தங்கைக்கு தகவல்
சொல்லலாம் என்ற போது இருவரும் பிடிவாதமாக மறுத்துவிட்டனர். உறவுக்காரர்களுக்கு
தந்தி கொடுக்க அட்ரஸை வாங்கி கொண்டு தந்தி அலுவலகம் செல்ல எத்தனிக்கையில் எனது
செல்ஃபோன் அழைத்தது. எடுத்து காதில் வைத்தேன் ' நான் கிருஷ்ணாவோட தங்கச்சி
பேசுறேன்.... என்னோட செல்ஃபோன் வீட்டுல இருக்கு.... அது நான் என் சம்பளத்துல
சம்பாதிச்சி வாங்குனது.... அதை நீங்களே பொது ஆளா எடுத்து எங்கிட்ட
கொடுத்துறுங்க.....

No comments: