Tuesday, July 29, 2008

பத்தாம் நூற்றாண்டுத் தமிழ்... இருபத்தோராம் நூற்றாண்டு இசை!

பத்தாம் நூற்றாண்டுத் தமிழ்... இருபத்தோராம் நூற்றாண்டு இசை!

Image hosted by Photobucket.comசென்னை, கத்தோலிக்க திருச்சபையின் தமிழ் மையத்தின் நவீன சவுண்ட் ஸ்டுடியோவில், சுற்றிலும் இதமான ஒலிப்பின்னல்கள் சூழ, இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் ஆரட்டோரியோ பகுதியைக் கேட்டு மகிழ்ந்தேன். உடனே, அவருக்கு போன் செய்து பாராட்டினேன். ''வீட்டுக்கு வாங்க, சாவகாசமா பேசலாம்!'' என்றார். சென்றேன்.

முதலில், திருவாசகம் சிம்பொனி அனுபவம். இதை சிம்பொனி என்று அழைப்பது சரியில்லை என்கிறார். ஆரட்டோரியோஎன்கிற வகையில் தான் சேரும். ஆரட்டோரியோ என்பது musical work for orchestra and voices on a sacred theme. வாத்தியங்களுக்கும் குரல்களுக்கும் ஆக்கப் பட்ட புனிதமான கருத் துள்ள இசைப் படைப்பு.

''சிம்பொனி என்பது குறைந்தபட்சம் நான்கு அசைவுகள் கொண்ட விஸ்தாரமான இசைக்கோலம். சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவுடன் வாசித்ததால் மட்டும் இதை சிம்பொனி என்று சொல்ல முடியாது. கூடாது'' என்றார். இருந்தும், சிம்பொனி என்ற பதம் நிலைத்துவிட்டது. தென்னாடுடைய சிவன் என்னாட்டுக்கும் இறைவன் விதித்தது அது.

மாணிக்கவாசகரின் தமிழ் இளையராஜாவின் பரிவு மிக்க குரலில், முதலில் ஒலிக்கிறது.

'பூவார் சென்னி மன்னன் என்
புயங்கப் பெருமான் சிறியோமை

ஓவாது உள்ளம் கலந்து
உணர்வாய் உருக்கும்
வெள்ளக்கருணையினால்...'

இவ்வாறு துவங்குகிறார். (புயங்கம் என்றால், பாம்பு அல்லது ஒருவகைக் கூத்து) உடன், ஹங்கேரி புடாபெஸ்ட்டின் பாரம்பரியமிக்க பில்ஹார்மானிக் குழுவின் (நெறியாளர் & லாஸலோ கோவாக்ஸ்) நூற்றுக்கணக்கான வயலின்களும், மேற்கத்திய வாத்தியங்களும் கம்பீரமாகச் சேர்ந்துகொள்ள, ஸ்டீஃபன் ஷ்வார்டஸ் (அகாடமி அவார்ட் வாங்கியவர்) அளவாக,

I’m just a man 
Imperfect lowly 
How can I reach for 
Somthing holy

என்று ஆங்கில வரிகளாக மொழி பெயர்க்க, ஓர் அமெரிக்கர் அதைப் பாட, நியூயார்க்கில் பதிவு செய்த குரல்களும் சென்னைக் குரல்களுடன் சேர்ந்துகொள்ள, ஒரு பரவச நிலையில் பத்தாம் நூற்றாண்டுத் தமிழும் இருபத்தோராம் நூற்றாண்டு இசையின் இதமும் உலகளவு விரிய, மெய் சிலிர்க்கிறது. சொர்க்கத்துக்கு அடியவரோடு எழும் தருணத்தில், மாணிக்கவாசகர் இயற்றிய யாத்திரைப் பத்திலிருந்து எடுத்த இந்தத் துவக்கம் ஈசன் செயலாக நிகழ்ந்தது என்கிறார் இளையராஜா. இதன்பின், முதல் பதிகமான சிவபுராணத்தின் சம்பிரதாயமான ‘நமசிவாய வாழ்க’வில் ஆரம்பிக்காமல்,

'பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி
பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாகி
வல்லசுரராகி முனிவராய் தேவராய் 
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்...'

என்று பரிணாம தத்துவத்தை, ஏறக்குறைய டார்வினுக்கருகில் கொண்டு வந்துவிட்ட வரிகளை எடுத்துக்கொள்கிறார். (So many forms I must wear. So many lives I must bear.)

‘புற்றில் வாழ அரவும் அஞ்சேன் 
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் 
கற்றிலாதவரைக் கண்டால் அம்ம நான்
அஞ்சுமாறே’

என்று அச்சப்பதிகத்திலிருந்தும், அதன்பின் அச்சோப்பத்து திருக்கோத்தும்பி என்று திருவாசகத்தின் முக்கியமான வரிகளை எடுத்துக் கொண்டு இசையமைத்து, முழு நூலையும் ரசித்த அனுபவத்தை இருபது நிமிஷத்தில் ஏற்படுத்துகிறார். அவ்வப்போது ஆரட்டோரியோ ஸ்டைலுக்கு ஏற்ப, லேசான ஆங்கில வரிகள் மொழிபெயர்ப்பில் உறுத்தாமல் அமெரிக்கர் பாடும்போது நிகழும் அனுபவத்தில், சங்கீதம் கால தேசம் மொழி எல்லாம் கடந்தது என்பது நிரூபணமாகிறது.

இசைஞானி திருவாசகத்துக்கு நிஜமாகவே உருகியுள்ளார். மேற்கத்திய ஒத்திசைவையும் (ஹார்மனி) கிழக்கத்திய மெட்டையும் (மெலடி) சமனப்படுத்தும்போது, எந்த இடத்திலும் அவர் நம் ஆதார ராக அமைப்பைத் துறக்காமல், அவர்கள் பாணிக்காக சமரசம் செய் யாமல், நம் ராகங்களிலேயே மேற்கத்திய சிம்பொனி அமைப்பைக் கச்சிதமாகப் பொருத்தியிருக்கிறார். விளைவு, ஒரு மிகப் புதிய சங்கீதானுபவம்!

வருகிற ஜூன் 30&ம் தேதி, சென்னை மியூஸிக் அகாடமியில், இதன் கேசெட்டும் சி.டி\யும் வெளியிடப் போகிறார்கள். எல்லோரும் உற்சாகத்துடன், தமிழ் தெரிந்தவர்கள் கூடுதல் உற்சாகத்துடன் இதை வாங்கிக் கேட்கலாம். சினிமா இசையையும், ஒரே மாதிரியான குத்துப் பாடல்களையுமே கேட்டலுத்த செவிகளுக்கு மிகவும் மாறுபட்ட ஓர் அனுபவம் காத்திருக்கிறது.

''அதை நான் குறை சொல்ல மாட்டேன். நினைத்தால் என்னால் பாப் இசையை ஒரு கைசொடக்கில் கொண்டுவர முடியும். அந்தச் சங்கீதம் ரசனைக்கு ஏற்ப இறங்கி வருவது. இந்தச் சங்கீதம் படியேற்றம். புடாபெஸ்ட்டில், அவர்கள் நான் எழுதியதை ஒத்திகையாக முதலில் வாசித்தபோது, தமக்குள் சிரித்துக் கொண்டார்கள். நான் நிறுத்திவிட்டு, மொழிபெயர்ப்பாளரைக் கூப்பிட்டு, அவர்களிடம் பேசினேன். ‘நீங்கள் பின்னணி வாசிக்கப்போகும் இந்தப் பாடல், பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தலைசிறந்த மன்னன் கவிஞனுடையது. இறைவனிடம், பிறந்தலுத்த ஓர் ஆத்மாவின் வானுலக இச்சைகளையும் தெரிவிக்கும் உன்னதமான பாடல்கள்’ என்றேன்.

மறுபடி பாடிக் காட்டினேன். அவர்கள் இப்போது கண்கள் விரிந்து, பாடலின் ஆத்மாவைப் பிடித்து, சிறப்பாக வாசிக்கத் துவங்கினார்கள். சவுண்ட் இன்ஜினீயர் ரிச்சர்ட் கிங், ‘இம்மாதிரி எல்லா அமைப்பாளர்களும் பாடிக் காட்டினால், சிறப்பு கூடும்' என்றார்.

முதல் மூன்று நிமிஷத்துக்கான இசைக்கு ஸ்கோர் எழுபது பக்கம் எழுதியிருந்தேன். ஒரே நாளில் 26 பக்கம் எழுதியதைப் பார்த்து, கின்னஸ் சாதனையாக வியந்தார்கள்’’ என்றார் இளையராஜா.

''இதற்கெல்லாம் காரணம் யார்?'' என்றேன்.

''ஈசன்தான். இளையராஜா ஒரு கருவிதான். கத்தோலிக்க நண்பர்கள் மையத்தையும், பாஷை தெரியாத பில்ஹார்மானிக் குழுவையும், நியூயார்க் குரல்களையும், மாணிக்கவாசகர் என்னும்மேதையையும் ஒருங்கிணைத்தது ஈசன்தான். கடவுள் இருக்கிறார் என்பதற்கு இந்த நிகழ்வே அத்தாட்சி!’’ என்றார். மற்றொரு ஜீனியஸைச் சொல்லாமல் விட்டு விட்டார்.

ராஜாவின் திருவாசகத்தை ரசிக்க, நான் சிபாரிசு செய்யும் வழிகள் இவை.

1. சி.டி.யோ, டேப்போ... முதலில் காசு கொடுத்து வாங்குங்கள்.

2. இன்டர்நெட்டில் அனுப்பாதீர்கள். பிரதி எடுக்காதீர்கள். ஒரு அபாரமான கலைஞனுக்கு செய்யக்கூடிய குறைந்தபட்ச மரியாதை இது. மேலும், எம்.பி.3&யில் கேட்காதீர்கள். அதில் நிகழும் கம்ப்ரெஷன் இதன் உண்மையான செவிக்கினிமையைக் குறைத்துவிடும்.

3. போஸ் போன்ற ஒரு நல்ல சிஸ்டத்தில், சர்ரவுண்ட் சவுண்டில் கேளுங்கள். காரிலோ, செல்போன் பேசிக்கொண்டோ கேட்காதீர்கள். மற்ற பேரை தொந்தரவு செய்யாமலிருக்க விரும்பினால், ஆப்பிள் ஐபோடு சார்ந்த சில அபாரமான ஹெட்போன்களிலும் கேட்கலாம். 4. தனிமையில், இரவில் அல்லது அதிகாலையில் கேளுங்கள். இரண்டு நாள் விட்டு மறுபடி கேளுங்கள். நான், மையத்தில் தனியாக இருளில் உட்கார்ந்துகொண்டு, சவுண்ட் ப்ரூஃப் ஸ்டுடியோவின் நிசப்தத்தில் கேட்டேன்.

5. ரொம்ப அலறவிடாதீர்கள். சிம்பொனியில் உள்ள ஏற்ற இறக்கங்களை மழுப்பிவிடும்.

6. கொஞ்சம் சங்கீதம் தெரிந்தால் நல்லது. ராகம் தெரிய வேண்டும் என்பது அவசியமில்லை. அந்தந்த ராகங்கள் தரும் மூடை (Mood) இயல்பாக உங்கள் உள்ளத்தில் அனுமதியுங்கள்.

7. கேட்டு முடித்ததும் பாராட்டி, இசைஞானிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். ijaja2005@yahoo.co.in

8. உங்கள் நண்பர் களை வாங்கச் சொல்லுங்கள். இம்மாதிரியான முயற்சிகளுக்கு ஆதரவு தந்தால்தான், இந்தப் புதிய சங்கீதம் மேன்மேலும் நம் இலக்கியங்களுக்கும் உலகுக்கும் இசைப்பாலம் அமைக்கும்.

ராஜா அடுத்துச் செய்ய விரும்பும் காரியங்கள் என்னென்ன என்பதைப் பற்றிக் கொஞ்சம் பேசினோம். திவ்ய பிரபந்தத்தையும் செய்ய விரும்புகிறார். அதுபோல், சிலப்பதிகாரத்தின் சில அபாரமான வரிகளை மியூஸிக் வடிவத்தில் சுலபமாகச் செய்யமுடியும் என்கிறார். ராமாயணம் அல்லது மகாபாரதத்திலிருந்து சில பகுதிகளை எடுத்துக்கொண்டு இசைமாலை சூட்டலாம் என்கிறார்.

தேவை நிதி. டி.வி.எஸ்., சன்மார் போன்ற நிறுவனங்களும், வங்கிகளும், விளம்பரத்துக்கு ஏராளமாகச் செலவழிக்கும் கம்பெனிகளும், தங்க, வைர வியாபாரி களும், புடவைக் கடைக்காரர்களும் இணைந்து நிதி ஒதுக்கினால் சாத்தியமாகும். என்னிடம்ஒரு கோடி ரூபாய் இல்லை. இருந்தால், உடனே செக் எழுதித் தந்திருப்பேன். அத்தகைய அனுபவத்தை அவர் ஏற்படுத்தினார். நன்றி ராஜா ஸார்!

நன்றி: ஆனந்த விகடன்

No comments: