சுஜாதா எழுதிய கடைசி பாசுரம்
சில நாட்களாக உடல்நலத்தில் சற்று நலிவு ஏற்பட்டதனால் ஓரிரு எண்ணங்கள் தொடரை தொடர்ந்து எழுதமுடியவில்லை. இப்பொழுது உடல்நிலை சரியாகிவிட்டதால் இந்த தொடரை விட்ட இடத்தில் எடுக்கிறேன்.
திவ்ய பிரபந்தத்தில் எந்த பாசுரத்திலும் ஏதாவது ஒரு புதிய செய்தி இருந்தே தீரும். அந்த புதிய செய்திகளை சொல்லும்போது அதன் தமிழும் பக்தியும் சொல்லாட்சியும் அவரவர் ஆர்வங்களுக்கேற்ப நமக்கு கிடைக்கும். பல புதிய சொற்கள் பயில முடியும். இதற்காக ஒரு வைணவனாகவோ பக்தியால் நிறைந்தவனாகவோ இருக்கவேண்டும் என்பது கட்டாயமில்லை. தமிழார்வம் மட்டும் போதும். உதாரணத்திற்கு குலசேகர ஆழ்வாரின் 'வாளால் அறுத்து சுடினும்' என்ற பாசுரத்தில் அந்த காலத்து சர்ஜரி பற்றிய செய்திகள் கிடைத்தன என்பதை குறிப்பிட்டோம். இப்படி ஒவ்வொரு பாசுரத்திலும் நம்மால் திளைக்க முடியும்.
'கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை,
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள், மற்று ஒன்றினைக் காணாவே.'
இந்தப் பாசுரத்தை எழுதிய திருப்பாணாழ்வாரின் வாழ்க்கையைப் பற்றி நிறைய கதைகள் உண்டு. அவர் ஸ்ரீரங்கம் கோவில் நுழைவதற்கு அனுமதி கிடைக்காமல் தவித்தது. பகவானே பக்தனின் கனவில் தோன்றி 'என் நிஜமான பக்தனை ஏன் வெளியே நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டது. தாழ்ந்த குலத்தை சேர்ந்தவராக இருந்தும் அவரை மிகுந்த மரியாதைகளுடன் அரங்கனின் சந்நிதிக்கு அழைத்து வந்து அவர் பரவசம் அடைந்தது' என இந்தச் செய்திகள் எல்லாம் 'திவ்ய சூரி சரிதம்' போன்ற நூல்களில் கிடைத்தாலும் திருப்பாணாழ்வாரின் இந்தப் பாடலை தனிப்பட்டு ரசிப்பதற்கு எந்தவித தடையும் இல்லை. 'ஸ்ரீரங்கநாதர் ஒருவரே எனக்குப் போதும். வேறு யாரையும் தரிசிக்க வைத்து என்னை குழப்பாதீர்கள்' என்கிறார்.
மற்றுமோர் தெய்வமில்லை என்கிற சித்தாந்தம் வைணவத்தில் மிக முக்கியமானதொன்று. எந்த கடவுள் பெரியவர் யார் சீனியர் யார் ஜூனியர் என்பதெல்லாம் கவனம் கலைக்கும் விஷயங்களாகும். 'திருமால் ஒருவனே எனக்குப் போதும். அவனை தரிசித்த பின் எனக்கு வேறு யாரும் தேவையில்லை' என்கிறார் ஆழ்வார்.
பிரபந்தத்தில் எண்ணிக்கையில் மிக குறைவான பாசுரங்கள் இவருடையது. என்னுடைய பழைய பாவங்களையெல்லாம் தீர்த்து வைத்து என்னை 'வாரமாக்கி' வைத்தான். 'குத்தகைக்காரனாக்கிவிட்டான்' என்று சொல்லும்போது கடவுளுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவின் பரஸ்பரம் புரியும்.
No comments:
Post a Comment