Saturday, July 19, 2008

ஒரு தாய்
தன் குழந்தைக்குச்
சோறூட்டுகையில்
நிலவைக் காட்டுவது மாதிரி
காதல்
எனக்கு உன்னைக் காட்டியது. 

குழந்தை பரவசமாய்
நிலவைப் பார்த்துக்
கொண்டிருக்கையில்
தாய், தன் குழந்தையின்
வாய்க்குள்
உணவை ஊட்டுவது மாதிரி
நான் உன்னைப் பரவசமாய்ப்
பார்த்துக்கொண்டிருக்கையில்... 

காதல்
எனக்குள் ஊட்டியதுதான்
இந்த வாழ்க்கை! 

*********************************

நீ எப்போதும்
தலையைக் குனிந்தே
வெட்கப்படுவதால்
உன் மதிப்புமிக்க
வெட்கத்தையெல்லாம்
இந்தப் பூமி மட்டுமே தரிசிக்க
முடிகிறது! 

ஒரேயரு முறை
கொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி
வெட்கப்படேன்... 

வெகுநாட்களாய்
உன் வெட்கத்தைத் தரிசிக்கத்
துடிக்கிறது
வானம்! 

*********************************

நான் வழிபட
இந்த உலகத்தில்
எத்தனையோ கடவுள்கள்
இருக்கிறார்கள். 

நான் பின்பற்ற
இந்த உலகத்தில்
எத்தனையோ மதங்கள்
இருக்கின்றன. 

ஆனால், 

நான் காதலிக்க
இந்த உலகத்தில்
நீ மட்டும்தான் இருக்கிறாய்! 

முனிவர்கள் 
கடவுளைப் பார்ப்பதற்காகத் 
தவம் இருக்கிறார்கள். 
நானோ, 
ஒரு தேவதையைப் பார்த்துவிட்டு 
தவம் இருக்கிறேன். 

*********************************

எதற்காக
நீ கஷ்டப்பட்டுக் கோலம்
போடுகிறாய்..? 

பேசாமல்
வாசலிலேயே
சிறிது நேரம் உட்கார்ந்திரு,
போதும்! 

*********************************

உன் கண்கள்
தானம் செய்ததுதான்
இந்தக் காதல்!

No comments: